தமிழகத்தில் நடைபெற்ற டி.என்.பி.எஸ்.சி குரூப் 4 தேர்வை 16 1/2 லட்சம் பேர் எழுதிய நிலையில் முதல் 100 இடங்களை பிடித்தவர்களில் ராமநாதபுரம் மாவட்டத்தின் ராமேஸ்வரம் மற்றும் கீழக்கரை மையங்களில் தேர்வு எழுதிய 40 பேர் முறைகேடுகளில் ஈடுபட்டிருப்பதாக புகார் எழுந்தது.
இந்த இரு தேர்வு மையங்களில் தேர்வு எழுதிய அந்த 40 பேரில் 90 சதவீதம் பேர் வெளி மாவட்டத்தை சேர்ந்தவர்கள் என்று கூறப்படுகின்றது. இந்த தேர்வில் மாநில அளவில் முதல் இடம் பிடித்த சிவகங்கை மாவட்டம் பெரிய கண்ணனூர் கிராமத்தை சேர்ந்த திருவராஜ் (46 வயது) என்னும் ஆடுமேய்க்கும் தொழிலாளி.
நான்கு ஆண்டுகளுக்கு மேல் தொடர்ந்து படித்து இந்த தேர்வை எழுதியவர்கள் கூட 300க்கு 250 மதிப்பெண்ணை எட்டிப்பிடிப்பது சாத்தியமில்லாத போது 25 வருடங்களுக்கு முன்பு கல்லூரி படிப்பை முடித்து விட்டு ஆடு மேய்க்கும் தொழிலை பிரதானமாக செய்து சற்று வசதியுடன் வாழ்ந்து வரும் திருவராஜ், 300க்கு 289.5 மதிப்பெண் எடுத்தது எப்படி என்பது மில்லியன் டாலர் கேள்வியாக உள்ளது.
இந்த தேர்வு முறைகேடு தொடர்பாக தேர்வாணையம் விசாரணையை தொடங்கி உள்ள நிலையில், முறைகேட்டில் ஈட்டுபட்டு தேர்வில் அதிக மதிப்பெண் பெற்றவர்கள் மிகுந்த கலக்கத்தில் உள்ளனர் பலர் விசாரணைக்கு ஆஜராகாமல் இருப்பதற்காக, தலைமறைவாகி விட்டதாக கூறப்படுகின்றது.
இந்த நிலையில், முதல் இடம் பிடித்த ஆடு மேய்க்கும் தொழிலாளி திருவராஜுவின் அவரது மனைவியிடம் விசாரித்த போது தனது கணவர் வெளி ஊருக்கு சென்றிருப்பதாகவும் அவர் எபோது வருவார் என்று தெரியவில்லை என்று பேச்சை மடைமாற்றியுள்ளார். தேர்வுக்கு தயாராக திருவராஜ் படித்த புத்தகங்களை காண்பிக்க முடியுமா? என்று கேட்டதும் தனக்கு முக்கியமான வேலை இருப்பதாக கூறி வீட்டை பூட்டிவிட்டு சென்று விட்டார்.
இவரது ஊருக்கு அருகில் இளையன் குடியில் ஒரு தேர்வு மையம், சிவகங்கையில் ஒரு மையம் என்று இரு மையங்கள் உள்ள நிலையில் அங்கிருந்து 64 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள தேர்வு மையத்தை தேடிச்சென்றது ஏன்? என்ற கேள்வி எழுந்துள்ளது.
விசாரணைக்கு பயந்து திருவராஜ் தலைமறைவாகி விட்டதாக கூறப்படும் நிலையில் அவர் எழுதிய தேர்வு மையத்தில் தேர்வு எழுதி, அதிக மதிப்பெண் பெற்று தேர்வானவர்களை, சென்னைக்கு அழைத்து விசாரிக்க, டி.என்.பி.எஸ்.சி முடிவு செய்துள்ளதை அறிந்து இந்த முறைகேடு புகாரில் தொடர்புடையவர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
அதே நேரத்தில் குரூப் 2 A தேர்விலும் முறைகேடாக தேர்வு எழுதி 35 இடங்களை பிடித்து தற்போது அரசு பணிகளில் சேர்ந்து கடந்த ஒரு வருடம் அரசு ஊதியமும் பெற்று விட்ட நிலையில் அதில் முறைகேடு செய்தவர்களையும் விசாரணை நடத்தி கண்டறிய வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது.
ஆசிரியர் சேலம்பாரதிராஜா