சென்னை :''கல்வியில் அரசியல் கிடையாது; கல்வி தொடர்பாக, எந்த இடத்தில் இருந்து ஆலோசனைகள் வந்தாலும், அரசு பரிசீலிக்கும்,'' என, முதல்வர், எடப்பாடிபழனிசாமி தெரிவித்தார்.சட்டசபையில் நடந்த விவாதம்:
தி.மு.க., - ஈஸ்வரப்பன்: பிளஸ் 1 கணித பாடத்திற்கு, இரண்டு புத்தகங்கள் வழங்கப்பட்டு உள்ளன. இந்த புத்தகங்களில் உள்ள பாடங்களை நடத்தி முடிக்க, அதிக நாட்கள் தேவை. இந்த பாடத் திட்டம் தொடர்பாக, மாணவர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் மன அழுத்தம் உள்ளது. ஆசிரியர்களுக்கு முறையான பயிற்சி அளித்து, பாடத் திட்டத்தை செயல்படுத்தி இருக்கலாம். கல்வியாளர்களை அழைத்து, ஆலோசனை கேட்டிருக்கலாம்.
பள்ளிக்கல்வி துறை அமைச்சர் செங்கோட்டையன்: ஒப்புக்கொள்கிறேன். அடுத்த ஆண்டு முதல், இந்த பாட புத்தங்களின் அளவை குறைக்க, நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
ஈஸ்வரப்பன்: அப்படி என்றால், தேர்வில் தோல்வி அடையும் மாணவர்களுக்கு அரசு பொறுப்பேற்குமா?
செங்கோட்டையன்: கடந்த ஆண்டு, இந்த பாடப் புத்தகத்தை படித்து, 95 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
முதல்வர்: கல்வியாளர்களை வைத்து, அந்த குறைபாட்டை சரி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்.ஈஸ்வரப்பன்: மாருதி கார் ஓட்டுபவரை, 'பார்முலா ஒன்' காரை ஓட்டச் சொன்னால் விபத்து தான் நடக்கும்.
செங்கோட்டையன்: ஏதாவது குறை சொல்ல வேண்டும் என்ற நோக்கத்தில் பேசக்கூடாது.
கைத்தறித்துறை அமைச்சர் மணியன்: கல்வி தரத்தை மேம்படுத்த, ஜெயலலிதா நடவடிக்கை எடுத்தார். தகுதி தேர்வில் வெற்றி பெறுபவர்கள் மட்டுமே,ஆசிரியர்களாக நியமிக்கப்படுகின்றனர். தி.மு.க., ஆட்சியில், பதிவு மூப்பு அடிப்படையில், ஆசிரியர் பணியிடம் வழங்கப்பட்டது. அந்த நிலைமை தற்போது இல்லை. அரசு பள்ளிகளில், சிறந்த முறையில் கல்வி போதிக்கப்படுகிறது.
முதல்வர்: கல்வி என்பது உயிர் போன்றது. கல்வியில் அரசியல் கிடையாது. எந்த இடத்தில் இருந்து ஆலோசனைகள் வந்தாலும், அதை என் அரசு பரிசீலிக்கும். தமிழகத்தில் கல்வியின் தரம் சிறப்பாக உள்ளது. அந்த தரத்தை உயர்த்த நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. அதற்கு உண்டான ஒத்துழைப்பை எதிர்க்கட்சிகள் வழங்க வேண்டும்.இவ்வாறு, விவாதம் நடந்தது
ஆசிரியர் சேலம் பாரதிராஜா