கொரோனா விதிமீறல் உட்பட அனைத்து வழக்குகளும் ரத்து - முதல்வர் அதிரடி அறிவிப்பு.!

 

 

தென்காசி: கொரோனா பரவல் காலத்தில் விதிமுறைகளை மீறியதாக பதிவு செய்யப்பட்ட 10 லட்சம் வழக்குகள் ரத்து செய்யப்படும் என முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.தென்காசி மாவட்டம் கடையநல்லூரில் நடந்த தேர்தல் பிரசார கூட்டத்தில் முதல்வர் பழனிசாமி பேசியதாவது: கொரோனா பரவலை தடுக்க மத்திய அரசு அறிவுரையின் பேரில், தமிழக அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை அறிவித்தது. இதனையடுத்து போலீசார் மாநிலம் முழுவதும் சோதனை சாவடி அமைத்து வாகன சோதனை செய்தும், ஊரடங்கை அமல்படுத்த நடவடிக்கைகள் மேற்கொண்டனர். ஊரடங்கை மீறியவர்கள், வதந்தி பரப்பியவர்கள் என 10 லட்சம் வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. அதில், வன்முறையில் ஈடுபட்டு குறிப்பிட்ட குற்றங்களுக்காக பதிவு செய்யப்பட்ட வழக்குகள், முறைகேடான வழிகளில் -பாஸ் பெற்று பயன்படுத்தியது மற்றும் போலீசாரை பணி செய்ய விடாமல் தடுத்தது தொடர்பாக பதிவு செய்யப்பட்ட வழக்குகள் தவிர மற்ற அனைத்து வழக்குகளும் பொது மக்களின் நலன் கருதி, ரத்து செய்யப்படுகிறது.அதேபோல், குடியுரிமை சட்டத்திற்கு எதிராக நடந்த போராட்டங்கள் தொடர்பாக பதிவு செய்யப்பட்ட வழக்குகள் ரத்து செய்யப்படுகிறது. இப்போராட்டங்களின் போது தடையை மீறி பொது மக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் போராட்டங்களில் ஈடுபட்டதாகவும், பொதுச்சொத்துக்களுக்கு சேதம் விளைவித்ததற்காகவும், போலீசாரை பணி செய்ய விடாமல் தடுத்தது தவிர்த்து மற்ற வழக்குகள் ரத்து செய்யப்படும்.கூடங்குளம் அணுமின் நிலையத்திற்கு எதிராக நடந்த போராட்டம் தொடர்பாக பதிவு செய்யப்பட்ட வழக்குகளை வாபஸ் பெறுவது குறித்து பரிசீலனை செய்து முடிவு செய்யப்படும். இவ்வாறு அவர் பேசினார்